38 சங்கீதம்
38 சங்கீதம்
குறள் – நினைப்பூட்டலாக நிருபனாந் தாவீ
திணைத்திட்ட சங்கீத மே
சயிந்தவி சாபுதாளம்
1 உம்முடைய கடுமையிலே என்னை
உறுக்காதேயும் ஏகொவாவே
உம்முடைய உக்கிரத்தில் எனக்
குயிர்த்தெண்டனை செய்யாதேயும்
2 உம்முடைய அம்புகளோ எனது
உள்ளத்துக்குள்ப் பாய்ந்ததுவே
உம்முடைய தெண்டனையாம் கையோ
என்மேலே இறங்கினதே
3 எனக்கிருக்கும் மாங்கிசத்தில் உமது
சனத்தால்ச்சுகஞ் சற்றுமில்லை
எனக்குரிய பாவத்தினால் எந்தன்
எலும்பில்ச்சற்றும் அமைச்சலில்லை
4 என்னுடைய அக்கிரமத்தின் திரள்கள்
எனதுதலைமே லேறினதால்
மென்மேல்மிஞ்சுஞ் சுமையைப்போலே எனக்கு
மிஞ்சும்பார மாகினதே
5 என்னில்க்கிறுக்கால் எனதுபுண்கள் நாற்றம்
எடுத்தேயழுகிப் போகினதே
மென்மேலுநா னொடுங்கிமடங்கித் தினமும்
வியாகுலமாய்த் திரிகிறேனே
6 என்னுடைய குடல்வெட்டையால் நிரம்பும்
என்னுடலில் சொஸ்தமில்லை
மென்மேல்ப்பெல னற்றேயலைந்தேன் மன
வியாகுலத்தால்க் கதறுகிறேன்
7 என்னுடைய ஏங்கலெல்லாம் உமக்கு
முன்னேயிருக்கும் ஆண்டவரே
என்னுள்த்தவிப்பு உமக்குமறை வாக
இருப்பதில்லை என்தெய்வமே
8 என்னிதையங் குழம்பிமிக அலையும்
எந்தன்பெலனும் என்னைநீங்கும்
என்கண்களின் வெளிச்சந்தானும் எண்ணில்
இல்லாமலே போய்விட்டது
9 என்தோழன்மார் சினேகிதரு மானோர்
என்வாதைக்கு எதிரே நின்று
என்னைச்சேர்ந்த பேர்களுமோ தூர
இனமறைவாய் நிற்கிறார்கள்
10 என்பிராணனின் காதகர்கள் எனக்குக்
கண்ணிகளை வைக்கிறார்கள்
என்மேல்த்தீங்கு நாடுவோர்கள் கபடம்
எண்வர்தினந் தீங்குபேசி
11 செவிடனுக்கு ஒப்பாகவே இங்கே
செவிகேளாமல் நானிருந்தேன்
உவந்துஉலகில்த் தனதுவாயைத் திரவா
ஊமையனும் போலேயானேன்
12 கேளாமலுந் தன்னுடைய வாயால்
கெட்டியான மறுஉத்தாரம்
ஆளாளுக்குச் சொல்லாமலு மிருக்க
அகதிமாந்தன் போலுமானேன்
13 உமக்கேயென்றும் நானோஇங்கே எகொவா
உறுதியாகக் காத்திருப்பேன்
எனக்குநீரே மறுவுத்தாரங் கொடுப்பீர்
என்தெய்வமாம் எகொவாவே
14 என்நிமித்தஞ் சந்தோஷத்தைப் பகைஞர்
எதுவிதமும் அடையவேண்டாம்
என்னுடைகால் தள்ளாடிய பொழுது
என்மேல்வீம்பு கொள்வார்களே
15 என்னவென்றால் தள்ளம்பாற நானோ
இடமானவன் இடமானவன்
என்னுடைய நோவெப்போதுஞ் சுவாமீ
எனக்குமுன்னே இருக்கிறதே
16 என்னுடைய அக்கிரமத்தை அறிக்கை
யிட்டுக்கொண்டேன் உமக்கு முன்னே
என்பாவத்தி னிமித்தியமாய் சுவாமீ
யான்விசார மடைந்துகொண்டேன்
17 பாரும்எந்தன் பகைஞர்களோ வாழ்ந்து
பலத்திட்டார்கள் என்தெய்வமே
காரணமில் லாமலெனக்குப் பகை
காட்டுவோர்கள் பெருத்திட்டார்கள்
18 நன்மைக்காகத் தின்மைசெய்யும் மாந்தர்
நான்நன்மைபின் பற்றுவதால்
என்னைத்தங்கள் விரோதியாக எண்ணி
இருதயத்தால்ப் பகைக்கிறார்கள்
19 என்னையிப்போ கைவிடாமல் சுவாமீ !
எனக்குத்தூர மாகிடாமல்
என்ரெட்சிப்பின் ஆண்டவரே தீங்கில்
எனக்குஉதவத் துரிதஞ்செய்யும்