68 சங்கீதம்
68 சங்கீதம்
குறள்-ராகத் தலைவனுக்கு ராசனாந் தாவீது
பாகமாய்த் தந்த கீதப்பாட்டு
1 வது பங்கு வச.1 – 3
சிஞ்சுட்டி ஆதிதாளம்
தெய்வமே எழுந்தருளுவீர் தெய்வமே
1 தெய்வத்தின் சத்துருக்கள்
சிதறுண்பர் அவரின்பகைஞர்
ஒய்யாரமற்றே யவர்முன்
ஒடிப்போய் விடுவார்கள் – தெய்
2 புகைதன்னைக் கடுங்காற்றுகள்
புறட்டியே தள்ளுவதுபோல்
பகைத்துநீர் அவர்களைப்
பழியாகத் தள்ளுவீரே – தெய்
3 நெருப்புமுன் மெழுகுஉருகும்
நேர்மைபோ லாகாதோர்கள்
வெறுப்பாகிச் சுவாமிமுன்னே
வெந்தழிந்திடுவார்கள் – தெய்
4 நீதியோர்சுவாமி முன்னே
நேசமாய் மகிழ்ந்துகொண்டு
காதலாய்ச் சந்தோஷமாய்க்
களிகூர்ந்தே யிருப்பார்கள் – தெய்
2 வது பங்கு வச.4 – 10
கலியாணி சாபுதாளம்
தெய்வத்தின்மேலே பாட்டுப்பாடிடுங்கள்
தெய்வத்தின்நாமத்தைக் கீர்த்தனஞ்செய்யுங்கள்
1 தொய்வனாந்தரங்களி லேறிச்செல்பவர்க்குச்
சுத்தமாய்வழியைச் சமனாக்கிவிடுங்கள் – தெய்
2 அவருடை நாமம் யாஎன்ற சுவாமி
அவருக்குமுன்பாக களிகூர்ந்தேயிருங்கள் – தெய்
3 விதைவைக்குஞாயம் விசாரிப்போர் அவரே
கெதியற்றபேர்க்கவர் கிருபைசெய்பிதாவே – தெய்
4 தம்முடைபரிசுத்த தலத்திலேயிருக்கும்
நன்மையின்தெய்வமா யிருப்பவர் அவரே – தெய்
5 சிறைப்பட்டபேரைச் சரியானவேளை
சிறைநீக்கிவிடுவிக்குந் தெய்வமும் அவரே – தெய்
6 தனிமையானோரைக் குடியேற்றுவாரே
மனிதரில்முறடரே வசிப்பர்பாழ்நிலத்தில் – தெய்
7 சாமிநீர்உமது சனத்தின்முன் நடந்து
பூமியின் அந்தர வெளியில்வந்தீரே – தெய்
8 அப்போதுபூமி அதிர்ந்ததாகாசம்
தற்பரன்முன்பாகத் தத்தளித்ததுவே – தெய்
9 இந்தச்சீனாய்மலை இசரவேல்த்தெய்வம்
என்றதற்பரன்முன் இப்படியாச்சே – தெய்
10 மழைத்தண்ணீர் நிறைவாய் வருஷிக்கச்செய்து
இளைத்ததாம்உமது இடந்தேறச்செய்தீர் – தெய்
11 இந்தநற்சுதந்தரம் ஆனதில் உமது
மந்தையுந்தங்கியே வந்திடச்செய்தீர் – தெய்
12 சிறுமையானவனுக் கும்முடைதயவால்
அறிவுடன் அதைநீர் அமைத்தீர்பக்குவமாய் – தெய்
3 வது பங்கு வச.11 – 21
காப்பி ஆதிதாளம்
ஆண்டவரோ தம்முடைய வசனந்தந்தாரே
அதைச்சொல்லுஞ் சுவிசேடகர்திரள்ச் சேனையே
1 மாண்டசேனை ராசர்களோ
வம்பில்ச்சுற்றி திரிந்தார்கள்
மகிழ்ந்துவீட்டில்த் தங்கின வள்
வலுகொள்ளையைப் பங்கிட்டாளே – ஆண்ட
2 இருபுறத்துப் படைவகுப்புக் குள்ளிருக்கையில்
இறகுதங்கஞ் செட்டைவெள்ளியாயிலங்கிய
ஒருபுறாவின் சாயல்நீங்கள்
சருவவல்ல சுவாமியதில்
அரசர்களைவைத்ததாலே
அந்தகாரம் வெளிச்சமாச்சே – ஆண்ட
3 பாசான்மலை போலேதெய்வ மலையிருக்குமே
பாசான்மலை போலேயது சிகரமுள்ளதே
வாசஞ்செய்வார் என்றும் அதில்
மகிமைத்தெய்வமாம் எகோவா
வம்பாகஏன்விம்முவீர்கள்
மலைகளே கான்மேடுகளே – ஆண்ட
4 தெய்வரதம்பதினாயிரம் அனந்தலட்சமே
திவ்வியதலமானசீனாய் மலையிலிருந்த
அவ்விதம்போ லாண்டவர் தாம்
அவர்களுக்குள் ளிருக்கிறார்
அவ்விதம்போலாண்டவர்தாம்
அவர்களுக்குள் ளிருக்கிறார் – ஆண்ட
5 தேவரீரே உன்னதத்துக்கேறிப்போனீரே
சிறையாக்குங் கேட்டைச்சிறை யாக்கிப்போட்டீரே
ஆவிவரம் மனிதருக்கும்
ஆகாதவீண் முறடருக்கும்
பாவஅவர்களுக்குள்ளே யென்றும்
பரன்யாகங்க என்றும்பெற்றீர் – ஆண்ட
6 ஆண்டவர்எந் நாளுந்தோத்ரம் ஏற்கத்தக்கவர்
அவர்நமதுமேலேபாரஞ் சுமத்திவைத்தாலும்
மீண்டுகாக்கும் நல்லதெய்வம்
மெய்யாயவர் தாம்நமக்கு
மாண்டுபோக மரணம் வந்தும்
மாறிச்சீவன் பிழைக்கச்செய்வார் – ஆண்ட
7 தம்முடையசத்துருக்கள் வலுசிரசையும்
தன்பழுதை விட்டிடாமல் வைத்திருக்கிற
எம்மனிதன் மயிருச்சியும்
இடிந்துடைய செய்திடுவார்
இதைமெய்யாய்த்தெய்வஞ் செய்வார்
இதைமெய்யாய்த் தெய்வஞ்செய்வார் – ஆண்ட
4 வது பங்கு வச.22 – 31
விருத்தம்
உம்முடைய பகைவர்களி லவனவனின்
உதிரத்தில்உம்முடைகால் பதிவதற்கும்
உம்முடையநாய்கள் தங்கள் நாக்கினாலே
உரப்பியேஅதை நக்கிக் குடிப்பதற்கும்
நம்முடையசனந்திரும்பப் பாசானென்னும்
நாட்டைவிட்டுத்திரும்பி வரச் செய்தோமென்றும்
செம்மையாய்க் கடலாழந் திருந்துமிங்கே
திரும்பிவரச்செய்தோமென்றுமெசமான்சொன்னார்
எதுகுலகாம்போதி ஏகதாளம்
உம்மள்நடைகளைக் கண்டனர்
என்தெய்வமாம் என்ராசனாம்
உம்மள்நடைகளைக் கண்டனர்
1 செம்மையாஞ் சுத்ததலத்திற்கே
செயமாய் நடந்துவருகிற
செம்மையாஞ் சுத்ததலத்திற்கே
செயமாய் நடந்துவருகிற -உம்
2 முன்னால்ப்பாடும் மாந்தரும்
பின்னால்மிருதங்கஞ் சேவிக்கும்
கன்னியர்க்குள்ளே கிண்ணாரம்
காதலிப்போரும் நடந்தனர் -உம்
3 எசமானாகிய தெய்வத்தை
இசர வேலூற்றினிமித்தியம்
சுசியாய்த் தெய்வ சபைகளில்த்
தோத்திரஞ்செய்யுங்களென்பர்கள் -உம்
4 அங்கேயவர்களை யாள்கிற
அற்பப்பென்யமீன் யூதாவின்
சங்கப்பிரபுக்கள் நவுதலி
சாபுலோன் பிரபுக்களிருந்தனர் -உம்
5 உம்முடைய தெய்வமே
உமக்குப்பெலன் தந்தருளினார்
எம்முடைய தெய்வம் நீர்
எமக்குத்தந்ததைக் காத்திடும் -உம்
6 செருலேமின் உம்முடை
தெய்வாலயத்துக்காகவே
அரசர்க ளுமக்குக் காணிக்கை
அதிகமாய்க் கொண்டுவரு வார்கள் -உம்
7 வெள்ளித்துண்டுகள் நிமித்தியம்
மிதிபடும் நரழ்களாங்கன்றுகள்
வல்லதாம்எருதுகள் கூட்டத்தை
மகிமைத் தெய்வமே உதம்பிடும் -உம்
8 மெத்தையாய் நாணலில்த்தங்கிடும்
மிருகத்தைநீரே உதம்பிடும்
யுத்தம்விரும்பிய நரழ்களைக்
கற்தர்சிதறிடச் செய்குவார் -உம்
9 பிரபுக்களெகிப்பத் திலிருந்துதான்
வருவார்கள் ஏத்தியோப்பியா
பரனுக்குத் தன்னுடை கைகளைச்
சுருக்காயெடுத்திடநோக்கிடும் -உம்
5 வது பங்கு வச.32 – 35
அசாவேரி ஆதிதாளம்
பூமியின்ராச்சியங்காள் போற்றிடுங்கள் பரனைப்
பாடுங்கள் ஆண்டவரைப் போற்றிடுங்கள்
1 ஆம்ஆதிவானங்களுக்
கப்புறத்துப் பரமண்டலம்
போம்படியேறிச் சென்ற
புனிதரைப் போற்றிடுங்கள் -பூமி
2 சத்துவத்துமுழக்கந் தன்னைத்
தமது சத்தத்தோடேயவர்
மெத்தத்தொனியாகச் செய்யும்
விந்தையிதோ பாருங்கள்
சத்துவமிங்கவர்க்கே யென்று
சாற்றுதல் செய்யுங்களே
சத்துவமிங்கவர்க்கே யென்று
சாற்றுதல் செய்யுங்களே -பூமி
3 தெய்வமகிமை இசரவேல் மேல்ச்
சிறந்துநிற்கு தென்றுமவர்
திறமையோ ஆகாசத்
திசைகளின் மேலுமுண்டு
தெய்வமேநீர் விசேஷித்த
சேத்திரத்தைத் தாவி வந்து
மெய்யாகப் பயங்கரம்
விளங்கியே நின்றிருப்பீர் -பூமி
4 சனத்துக்குப் பெலன்தந்து
சத்துவத்தை யருள்பவர்
சற்குணனாம் இசரவேலின்
சாமியான ஏகொவாதாம்
மகத்துவத்தோத்திரத்து
வளமையே சுவாமிக்கென்று
மகத்துவத்தோத்திரத்து
வளமையே சுவாமிக்கென்று -பூமி