57 சங்கீதம்
57 சங்கீதம்
விருத்தம்
தாவீது சவுலுக்குத்
தப்பியோர் கெபியொதுங்கிப்
பூவுலகத்தில்த் தானோ
புரண்டழியாப் படிக்கு
நாவினால்ப் பாடித் தெய்வ
ராகத்தின் தலைவனுக்குத்
தாவித்துக்கொடுத்ததிந்தத்
தங்கச் சங்கீதந்தானே
1 வது பங்கு வச.1-6
எதுகுலகாம்போதி ஆதிதாளம்
எனக்கிரங்கும் எனக்கிரங்குந் தெய்வமே
இரங்குந்தெய்வமே இரங்குந்தெய்வமே
1 தனக்கொதுக்காய் எனது ஆத்மம்
தாவிக்கொள்ளும் உம்மிடத்தில் – எனக்
2 விக்கினங்கள் கடந்துபோகும்
மட்டுக்கும்நான் உம்முடைய
றெக்கைநிழல் வந்தடைவேன்
தெய்வமே சுவாமி ! – எனக்
3 யாவுமெனக் காக செய்யும்
உன்னதத்தி னாண்டவராந்
தேவனையே நோக்கிச் சத்தம்
போடுவேன் சுவாமி ! – எனக்
4 எனைவிழுங்கப் பார்க்கிறவன்
என்னைநிந்தை செய்யும்போது
எனக்கொத்தாசை அனுப்பிஎன்னை
இரட்சிப்பார் சுவாமி ! – எனக்
5 தமதுகிருபை சத்தியத்தைச்
சாமிஉயர் தலத்திருந்து
அமைதியாக எனக்குமிங்கே
அனுப்புவார் சுவாமி ! – எனக்
6 எனதுசீவன் சிங்கங்களின்
நடுவிருந்து பரதவிக்கும்
மனுடர் தீயை இறைக்க நடுவில்க்
கிடக்கிறேன் சுவாமி ! – எனக்
7 அவர்கள்பல்க்கள் ஈட்டிதானே
அம்புகளு மாயிருக்கும்
அவர்கள்நாக்கு கூர்க்கருக்குப்
பட்டயம் சுவாமி ! – எனக்
8 வானங்களின் மேலுயரும்
உம்முடைய மகிமைபூமித்
தானமெங்கும் உயர்வதாகத்
தெய்வமே சுவாமி ! – எனக்
9 காலடிக்கு வலைசெய்தார்கள்
மடங்கடித்தான் என்னுயிரை
நீழக்குழியை எனக்குவெட்டி
வீழ்ந்தனர் சுவாமி ! (அதில்; 1: தாமே) – எனக்
2 வது பங்கு வச.7-11
துசாவந்தி ஆதிதாளம்
என்னிதையம் என்தெய்வமே
எத்தனத்துடனிருக்கும்
உன்னதமாய்ப் பாடிஉம்மை
உயர்த்திப் புகழ்ந்திடுவேன்
1 என்மகிமையுந் தம்பூர்வீணையும்
ஏற்றகாலையில் விழிக்குமே – என்னி
2 சாதிகளுக்குள்ளுஞ்சனக் கூட்டங்களுக்குள்ளும்
சாமிஉமக்கேற்றதுதிச் சங்கீதங்கள் பாடுவேன்
ஆதிவானம்ஆகாச மண்டலங்கள்மட்டும்
ஆண்டவரேஉமதுகிருபை சத்தியமும்எட்டும்
சோதிவானத் தலங்களின்மேல்க்கற்தர் நீரேஉயரும்
சுவாமிஉம்முடை மகிமைபூமியைச்
சூழ்ந்துமுற்றிலும் உயருமே – என்னி