53 சங்கீதம்
53 சங்கீதம்
குறள் – தாவீது ராகத் தலைவனுக்கு ஒப்புவித்த
பாவான போதகப்பாட்டே
விருத்தம்
1 தெய்வமேயில்லையென்று
செகத்தினில்ப் பயித்தியகாரன்
தினந்தினம் இருதயத்தில்த்
திருகலாய் நினைவுகொள்வான்
செய்யுந்தம் ஞாயக்கேட்டால்த்
தேசத்தோர் தமைக்கெடுத்தார்
செகந்தனில் நன்மைசெய்யத்
தெரிந்தவ னில்லை இல்லை
தெய்வத்தைத் தேடுஞ்சிந்தை
திகைந்தவ னுண்டோவென்று
தெய்வமோ நரரைப்பார்த்தார்
சிறந்திடும் பரத்திருந்து
அய்யய்யோ வழிவிலகி
அனைவருங் கெட்டிட்டார்கள்
அழுக்கில்லா நன்மைசெய்ய
அகிலத்தில் யாருமில்லை
2 அப்பம்போல் நமதுகூட்டத்
தமைந்திடுஞ் சனத்தைக் தின்கும்
அக்கிரமக்காரர் யார்க்கும்
அறிவில்லைத் தானோசற்றும்
தற்பரன்சமுகம் நோக்கிக்
ததியினில்க் கூப்பிட்டார்கள்
தத்தளிப்பில்லா அங்கே
தத்தளித்த திர்ந்திட்டார்கள்
தற்பரன் உனக் கெதிராய்த்
தாணையமிறங்கி நின்ற
சத்துருஎலும்பை யெல்லாம்
சன்னமாய்ச் சிதறடித்தார்
இப்படி அவர்களை நீ
இகழ்ச்சிக்குள் ளாக்கிவிட்டாய்
ஏனெனில் அவர்களையோ
ஏகொவா வெறுத்துப்போட்டார்
3 இசரவேல்ச் சனத்தின் மீட்பு
இன்பமாஞ் சீயோனென்ற
இடந்தனிலிருந்து வந்தால்
எங்கெங்கும் நலம்நலமே
நசல்கொண்ட தஞ்சனத்தின்
நாசமாஞ் சிறையிருப்பை
நாயனாம் ஏகொவாதாம்
நட்புடன் திருப்பும்போது
நிசமுடன் யாக்கோபுக்கு
நித்தியகாலமாக
நேசமா மனக்களிப்பு
நீடித்தே நிலைத்திருக்கும்
இசரவேல்ச் சந்ததிக்கு
எத்தேசகாலமாக
இன்பமா மனமகிழ்ச்சி
எங்கெங்கு மிகவுண்டாகும்