39 சங்கீதம்
39 சங்கீதம்
குறள் – எதித்தூன் எனுமோர் இராகத் தலைவற்
கதிபன் தவிதுதந்த பாட்டு
முகாரி ஆதிதாளம்
நாவினால்ப்பாவஞ் செய்யாப்படிக்கென்
நடைகளைக் காப்பேனென்றேன்
பாவிமுன்என் வாயைக் கலினத்தால்ப்
பத்திரப் படுத்துவேனே
1 ஊமையோ லிருந்து நலமானதையும்
உதட்டால்ப் பேசேனென்றேன்
சேம மற்றென் நோவோ அதிகத்
தீவிரமாயினதே – நாவி
2 நெஞ்சமெனக்குள் நெருப்பாய்க்கொதித்து
நினைப்பும் மிகுத்ததுவே
தொய்ஞ்சேனப்போ தெனதுநாவால்ச்
சுவாமியை வேண்டல்செய்தேன் – நாவி
3 என்நிலையாமை எத்தனையென்று
ஏழைநா னுணர்ந்துகொள்ள
என்முடிவென்வாழ் நாளினளவை
எனக்குத் தெரியவையும் – நாவி
4 என்நாட்களைநீர் நாலுவிரல்கடை
யாகநீர் அளவுசெய்தீர்
என்னாயுள்நாளோ உமக்குமுன்னாச்சே
ஒன்றுமில்லாததுபோல் – நாவி
5 எந்தமனிதனு மாய்கைமாய்கை
யென்பது மிகநிசமே
எந்தமனிதனுந் திரியுந்திரிச்சல்
எல்லாம்வேடமல்லவோ – நாவி
6 மாய்கையாக ஆஸ்தியைச்சேர்த்து
வம்பாய் அமளிசெய்வான்
பேயனிவனே யாரதைவாரிப்
பிடிப்பா னென்றறியான் – நாவி
7 ஆண்டபரனே எதற்குநானிப்போ
ஆசையாய்க் காத்திருப்பேன்
மீண்டிடுவீரென் நம்பிக்கையுமது
மேலேயிருக்குமல்லோ – நாவி
8 என்னுடைமீறுதல் யாவையும்நீக்கி
என்னைநீர் ரட்சியுமே
என்னைநின்மூடர் நிந்தனைசெய்ய
இடங்கொடுத் திடவேண்டாம் – நாவி
9 என்னுடைவாயை யான்திறக்காமல்
இருக்கிறேன் மவுனமதாய்
என்பானேநீர் தாமிதைச்செய்தீர்
ஏதொன்றும் நான்பேசேன் – நாவி
10 உம்முடைவாதனை யென்னையேவிட்டு
ஒழியவே விலக்கிடும்
உம்முடைகரத்தி னடிகளாலடியேன்
ஒடுங்கியே தாழ்ந்துவிட்டேன் – நாவி
11 கடிந்துநீர் மனிதனைப் பாவத்தினிமித்தம்
கண்டிக்கும் போதில் அவன்
வடிவே பொட்டரித் தழிந்துபோம் மெய்யாய்
மாய்கையே மனிதரெல்லாம் – நாவி
12 கர்தர் நீர்என் செபத்தைக்கேளும்
கவனியுங் கூப்பாட்டை
கர்தர்நீர் மவுனங் காட்டிடவேண்டாம்
கண்ணீர்விட்டழுதேன் நான் – நாவி
13 அரதேசியுமாய்ப் பரதேசியுமாய்
அடியேனுமக்குமுன்னே
புறதேசத்திலலைந்த என் பிதிர்க்கள்
போலவே யாகிவிட்டேன் – நாவி
14 இங்குநானென்று மிருப்பதேயில்லை
இதைவிட்டுப் போகுமுன்னே
இங்கேசற்று லகுவடைவதற்கு
என்னைநீர் மீட்டுவிடும் – நாவி