34 சங்கீதம்
34 சங்கீதம்
வெண்பா
தாவீ தபிமெலெக்கு சன்னதியில்த் தன்முகத்தைப்
பாவினையாய் வேறுபடுத்தினதால் ஏவி
அவனால்த் துரத்துண்டு அப்பாலே போம்போ
துவந்துசொன்ன சங்கல்ப்பப் பாட்டு
1 வது பங்கு. வச.1 – 10
மோகனம் சாபுதாளம்
தோத்திரஞ்செய்குவேனே எக்காலமுந்
தோத்திரஞ்செய்குவேனே
1 வாழ்த்தியே யெகோவாவின்
துதியை என்வாயிலே
வைத்திடுவேனெந்த
வேளையும்வைப்பேனே – தோத்
2 என்நெஞ்சம் மேன்மையைப்
பாராட்டுஞ் சுவாமிக்குள்
துன்பத்தின்மாந்தரதைக்
கேட்டிங்கே மகிழ்வார்கள் – தோத்
3 எகொவாவுக்கென் கூட
மகிமையைச் சொல்லுங்கள்
எகோவாவின் பேரைநாம்
ஏகமாய் உயர்த்துவோம் – தோத்
4 எகோவாவைத் தேடினபோ
தெனக்கீய்ந்தார் உத்தரவை
திகில்யாவும் நீக்கியே
தேற்றியென்னைக் காத்து விட்டார் – தோத்
5 அவருடை முகம்நோக்கி
அவரண்டைக் கோடிவரும்
எவர்களின் முகமும்வெட்கம்
இகழ்ச்சியு மடைந்திடாதே – தோத்
6 துன்பத்தில் நான்செய்த
மன்றாட்டைக் கேட்டெனக்குத்
துன்பம்யாவும் நீக்கியென்னைச்
சுகமாக மீட்டுவிட்டார் – தோத்
7 எகோவாவுக் கஞ்சுவோரை
எகோவாவின் தூதன்தாமே
தகுந்தவோர் பாளையத்தால்த்
தற்காத்து ரட்சிப்பாரே – தோத்
8 எகோவாவே நல்லதெய்வம்
என்றுருசிபார்த்திடுங்கள்
எகோவாமேல் நம்பிக்கையாய்
இருக்கிறவன் பாக்கியவான் – தோத்
9 எகோவாவின் பரிசுத்தர்காள்
எகோவாவுக் கஞ்சிடுங்கள்
எகோவாவுக் கஞ்சுவோர்க்கு
ஏதொன்றுங் குறைபடாது – தோத்
10 சிங்கத்தின்குட்டி தொய்ந்து
தின்கஇரை யற்றிருக்கும்
எங்கும்நன்மை குறைபடாது
எகோவாவைத் தேடுவோர்க்கு – தோத்
2 வது பங்கு. வச.11 – 22
காப்பி ஆதிதாளம்
பிள்ளைகளே என்னிடத்தில்
வந்துகேளுங்கள் நீங்கள்
நல்லசுவாமிக் கஞ்சி நடக்கும்
வகையைப் போதிப்பேன்
1 நல்லநாளைச் சீவனையும்
நாடிடுவோன் யார் விலக்கு
பொல்லாவசனங் கபடச்சொல்லுன்
நாவுதடுவிட்டு – பிள்ளை
2 பொல்லாங்கை விட்டுவிலகி
நன்மையைக்செய்நீ என்றும்
நல்லசமாதானந்தேடி
அதைப்பின்தொடரு – பிள்ளை
3 எகோவாவின் கண்கள்நீத
வான்கள்மேல்வைத்தே யிருக்கும்
ஏகோவாவின் செவிகளவர்கள்
கூப்பாடுகேட்கும் – பிள்ளை
4 பொல்லாவினையைச் செய்வோர்நாமம்
பூமியைவிட்டேயொழிய
நல்லசுவாமி யுடையமுகம்
அவர்களைத் தாக்கும் – பிள்ளை
5 நீதிமான்கள் கூப்பிடும்போ
தவர்களைக்கேட்டு அவர்கள்
மீதில்வரும் இடுக்கமெல்லாம்
நீக்கிடுவாரே – பிள்ளை
6 பாவநெஞ்சம் நைந்தபேர்க்கு
கற்தர்சமீபமாகி
ஆவிநொறுங்குண்ட பேரை
அவரே ரெட்சிப்பார் – பிள்ளை
7 நீதிமானுக் கனேகமான
தீங்குநேரிட்டும் அந்தச்
சோதனைக ளெதுக்குமவனை
நீக்கிடுவாரே – பிள்ளை
8 அவனெலும்பை யெல்லாமவரே
காப்பாற்றிக்கொள்வார் அதில்
அவத்தமாக ஒன்றுமுறிபட்
டழியமாட்டாது – பிள்ளை
9 தீதுச்செயல் பொல்லாங்கான
மாந்தனைக்கொல்லும் இதோ!
நீதிமானைப் பகைப்பவர்கள்
நேரஸ்தராவார் – பிள்ளை
10 எகொவாவோ தமதடியார்
ஆத்துமாக்களை மீட்பார்
எகோவாவின் பத்தனெவனுங்
குற்றஞ்சமக்கானே – பிள்ளை