21 சங்கீதம்
21 சங்கீதம்
குறள் – ராகத்தலைவனுக்கு ராசனாந் தாவீது
பாகமாயொப்புவித்த பாட்டு
1 வது பங்கு. வச . 1 – 6
காம்போதி திரிபுடைதாளம்
1 உம்முடைய வல்லமையால்
எம்முடையராசன் மகிழ்ந்தாரே
உம்முடைய ரட்சிப்பினால்
உற்சாகத்தை எத்தனையாய்க்கொண்டார்
2 அவர்மனதி னாசைப்படி
அவர்க்குநீர் ஏற்றவரந்தந்தீர்
அவர்வாயின் மனுவையிங்கே
அகற்றிக்கீழாய்த் தள்ளாதிருப்பீரே
3 நன்மைகளி னாசீர்வாதம்
நட்புடனேயவர்க்குக் கொண்டுவந்தீர்
பொன்முடியை யவரின் சிரசில்ப்
பூட்டியபிசேகஞ்செய்து வைத்தீர்
4 உம்மிடத்தில்ச் சீவன்கேட்டார்
உவந்துநல்நாள் நீடிப்பவர்க்குத் தந்தீர்
செம்மையாகவைத்தீர் அவரை
சிறந்தசதா காலங்களாய்த் தானே
5 மிகப்பெரிய தாச்சுதவர்
மேன்மைதானே உமதுரட்சிப்பாலே
மகத்துவமும் மகிமைத்தாக்கும்
வைத்தீர்அவர் மேலே யிப்போதானே
6 ஆசீர்வாத மங்களமாய்
அவரையேநீர் என்றென்றைக்கும் வைத்தீர்
நேசர்பூரிப்பாக்கி வைத்தீர்
நீதசமுக மகிழ்ச்சியாலே யிப்போ
2 வது பங்கு. வச . 7 – 13
வெண்பா
நாதராம்எம்முடைய ராசன் எகோவாமேல்
போதவே நம்பிக்கையாயிருப்பார் ஆதலினால்
உன்னதமானவரின் உள்ளன்பால் என்றுமவர்
இன்னமசையாதிருப்பாரே
உசானி ஆதிதாளம்
சத்துருக்களையெல்லாம் உம்முடையகையே
சாலவுங் கண்டுபிடித்திடுமே.
1 வெற்றியான உம்முடைய வலதுகரம் உம்மை
விரோதிப்பவர்களைக் கண்டுபிடிக்கும்(உமது) – சத்துரு
2 உம்முடையகோபத்தின் காலத்திலே அவர்கள்
உயர்சூளை யக்கினியாகச் செய்வீர்
உம்முடையகோப விழுங்கிடுவீர் அவர்கள்
உருவையோ அக்கினிபட்சிக்குமே (உமது) – சத்துரு
3 அவர்களின் கனியையோ பூமியிலே இல்லா
தழித்திடுவீ ரொழியச் செய்திடுவீர்
அவர்களின் கனியைநீர் பூமியிலே இல்லா
தழித்திடுவீ ரொழியச்செய்திடுவீர்(உமது) – சத்துரு
4 உம்மையிங்கெதிர்த்துத் தம்பொல்லாப்பை அவர்கள்
உள்ளத்தில்யோசித்துக் கொண்டார்கள்
விம்மியேதீவினையை யெத்தனித்தும் அவர்கள்
மேற்கொள்ள மாட்டாமற் போனார்கள் (உமது) – சத்துரு
5 அவர்களைலெக்குவைத் ததுக்குப்பின்னே உமது
அம்புகளைநாணேற்றித் தொடுத்திடுவீர்
அவர்களின் முகத்துக்கு நேராக அதுகள்
அசுப்பிலேபாய்ந்திட எய்திடுவீர் (உமது) – சத்துரு
6 தற்பரா ! உம்முடைய வல்லமைகள் உலகச்
சனத்துக்குத் தெரியநீர் உயர்ந்தருளும்
அப்போது உம்முடைய வல்லமையைப்பாடி
அதிகமாய் அதிகமாய்ப் புகழ்ந்திடுவோம் (உமது) – சத்துரு