14 சங்கீதம்
14 சங்கீதம்
குறள் – ராகத்தலைவனுக்கு ராசனாந் தாவீது
பாகமாயொப்புவித்த பாட்டு
விருத்தம்
1 தேவனேயில்லையென்று
செகத்தினில்ப் பயித்தியகாரன்
தினந்தினமிருதயத்தில்த்
திருகலாய் நினைவுகொள்வான்
தீவினையருவருப்பாய்த்
தேசத்திலுள்ளோர் கெட்டார்
செகந்தனில் நன்மைசெய்யத்
தெரிந்தவனில்லையில்லை
ஆவலாய்ப் பரனைத்தேடும்
அன்பர்களுண்டோ என்று
ஆண்டவன் பரமண்டல
ஆசனத்திருந்தேயிந்தப்
பூவுலகத்தோர் தம்மைப்
புனிதமாய்ப் பார்க்கும்போது
போம்வழி விலகியாகும்
புறண்டனர் ஏகமாக
2 செப்பமாய்ப் புவியில்நன்மை
செய்பவனில்லையில்லை
தெரிந்தந்தப்படியே செய்யத்
திட்டமாயாருமில்லை
அப்பம்போல் நமதுகூட்டத்
தமைந்திடுஞ் சனத்தைத்தின்கும்
அக்கிரமக்காரர் யார்க்கும்
அறிவில்லைத் தானோசற்றும்
தற்பரன்தனை மன்னாடார்
தத்தளித்ததிர்ந்தாரங்கே
சாமியோ நீதிமானின்
சந்ததியோடிருப்பார்
தற்பரன் சிறுமைப்பட்டோன்
சார்பென்ற யோசனையை
சாலவும் வெட்கமாக்கச்
சடுதியாய்க் கூடினீர்கள்
3 இசரவேல்ச் சனத்தின் மீட்பு
இன்பமாஞ் சீயோனென்ற
இடந்தனிலிருந்தே வந்தால்
எங்கெங்கும் நலம்நலமே
நசலகொண்டதம் சனத்தின்
நாசமாஞ் சிறையிருப்பை
நாயனாம் எகொவாதாமே
நட்புடன் திருப்பும்போது
நிசமுடன் யாக்கோபுக்கு
நித்திய காலமாக
நேசமாம் மனக்களிப்பு
நீடித்தே நிலைத்திருக்கும்
இசரவேல்ச் சந்ததிக்கே
எத்தேச காலமாக
இன்பமாம் மனமகிழ்ச்சி
எங்கெங்கும் மிகவுண்டாமே