106 சங்கீதம்
106 சங்கீதம்
விருத்தம்
1 என்றென்றுந் தயவுநிலையுள்ளோரான
எகொவாவைத் துதியுங்கள் அவரே நல்லோர்
நன்றாக அவர் துதியை வல்லமையை
நாவினால்விண்டுசொல்லத் தகுந்தவன்யார்
என்றைக்கும் நீதியையும் ஞாயத்தையும்
ஏற்பட்டுநடத்துபவன் பாக்யவாளன்
என்றைக்கும் நீதியையும் ஞாயத்தையும்
ஏற்பட்டுநடத்துபவன் பாக்யவாளன்
2 உம்மாலே தெரிந்தெடுக்கப் பட்டிருக்கும்
உமதுசாதிச்சுதந்தரத்தை யொட்டி நாங்கள்
நம்மைக்கண்டு மனமகிழ்நது அந்தமேன்மை
நாவினால் பாராட்டி நிற்பதுக்கு
உம்முடை சனத்துக்கு நீர் வைத்திருக்கும்
உள்ளன்புப் படிக்குநீர் எனை நினைத்து
உம்முடையரட்சிப்பி னாலேயென்னை
உகந்துசந்தித் தாண்டருளும் எனதுசாமி!
3 எங்கள் முன்னோ ரக்கிரமம் நடப்பிவித்து
இடக்கான ஆகாமியப் பவஞ்செய்தார்கள்
பங்கமா யெகிப்பத்தி லும்முடைய
பலத்தநல்அதிசெயத்தை யுணர்ந்திடாமல்
சங்கையாம் உமதுதயைத் திரள்ரட்சிப்பைச்
சற்றெனினும் நினையாம னாணலாழிப்
பொங்குகரை தனில்க் கலகஞ் செய்தபோங்கும்
புத்திரராம் எங்களுக்கும் பாவமாச்சே
4 ஆனாலுஞ் சுவாமிதம் வல்லமையை
அகிலத்தி லறியச்செய் திடும்படிக்கு
ஞானமாய்த் தம்நாம நிமித்திமாக
ரட்சித்தார் அவர்களைத் தன் சனமாய்ப் பார்த்து
நாணல்க்கடல் தனையதட்ட அச்சணத்தில்
ரண்டாகப் பிளந்துதரை வறண்டுபோச்சு
நாணல்க்கடல் தனையதட்ட அச்சணத்தில்
ரண்டாகப் பிளந்துதரை வறண்டுபோச்சு
5 உலர்ந்த்தரை போலவர்கள் கடலுக்கூடே
ஒய்யார மாய் நடந்தக் கரைசேர்ந்தார்கள்
பலமானசத்துருக்கள் கைக்கு அந்தப்
படிநீங்கி ரட்சிப்பையே யடையச்செய்தார்
சலந்தனிலே சத்துருக்கள் முழங்கச்செய்தார்
தப்பியோர் நரன்மீர்ந்தும் பிழைத்ததில்லை
நலமாக அவருடையய சொல்லையங்கே
நம்பியவர் துதியையுமே பாடினார்கள்
6 அவருடைய பெருஞ்செயலைச் சீக்கிரத்தில்
அசட்டை பண்ணித் தங்களுக்குள் மறந்திட்டார்கள்
அவர் நடப்புக் கவர்களங்கே காத்திராமல்
அந்தவனாந் தரத்திலிச்சை யுள்ளோராகி
அவர்களங்கே தெய்வத்தைப் பரிட்சைபார்த்தும்
அவர்களுக்குக் கேட்டதையே வரவுஞ்செய்தார்
அவர்களுக்கோ ஆனாலும் ஆத்துமத்தில்
ஆயாச மான இளைப் பணுகச்செய்தார்
7 சாமிதெரிந் தெடுத்துவைத்த ஆரான்மோசே
தனைக்கும்பாய்ப் போறாமை பண்ணினார்கள்
பூமிதாத்தான் தனைவிழுங்கி அபிராங்கும்பைப்
பூரணமாய் மூடிவிடச் சுவாமிசெய்தார்
ஆமவர்க ளகங்காரக் கும்புக்குள்ளே
அக்கினியும் பற்றியெறிந் தழிக்கச்செய்தார்
ஆமவர்க ளகங்காரக் கும்புக்குள்ளே
அக்கினியும் பற்றியெறிந் தழிக்கச்செய்தார்
8 மாடுபோல் விக்ரகத்தை யுண்டுபண்ணி
வணங்கினார்கள் ஒரேபு மலையினண்டை
ஈடற்ற தெய்வத்தின் மகிமைதன்னை
ஈனமாம் அதுக்குவமை யாக்கினார்கள்
நாடான எகிப்ப்த்துக் காம்தேசத்தில்
நாணல்க்கட லண்டையதி செயச்செயல்கள்
பாடான பயங்கரங்கள் செய்தோரான
பலத்தரட்சிப் பெகொவாவை மறந்திட்டார்கள்
9 ஆனதினால் அவர்களையோ தெய்வங்கொல்ல
அக்கினியா யுக்கிரத்தை யெழுப்பிக்கொண்டு
வானமிடிந் தழிப்பதுபோல் நிற்கும்போது
மன்னவனாய்த் தெரிந்தெடுக்கப் பட்ட மோசே
ஞானத்தோ டவர்களுக்காய்ப் பரிந்துபேச
நடுநிலையாய் நில்லாட்டா லப்போதானே
போன இடந் தெரியாமல் நாசம் பண்ணிப்
போடுவே னென்றசொல்லிஞ் சுவாமி சொன்னார்
10 சாமிசொல்லை நம்பாமல் நல்ல நாட்டைத்
தாழ்வாக எண்ணி யசங் கத்ஞ்செய்தார்கள்
சாமிசத்தங் கவனிக்கா திருந்து தங்கள்
தங்கள்குடி லிருந்தவர்கள் முனங்கினார்கள்
ஆமதற்காய் வனாந்தரத்தி லவர்கள் சாக
அவர்கள்வித்தைச் சாதிகட்குள் மடியச்செய்து
பூமியெங்குஞ் சிதறடிக்க தமதுகையைத்
தாமெடுத்தா ரவர்களுக்கங் கெதிராய்ததானே
11 அவர்கள்பெயோர் பாகாலுக் குடந்தையாகி
அணுவுயிரு மில்லாத விக்ரகத்துக்
கவமாக இட்டபெலி தனைப்பொசித்து
அதோடே ஆகாத நடப்புஞ்செய்து
அவருக்குக் கடுங்கோபம் வர நடந்த
ஆட்டத்தா லவ்விடத்தில்ப் பெருஞ்சங்காரம்
அவர்களுக்குள் அப்போது புகுந்தூடாட
அவர்கள் பெருங் கும்பாக அழிந்திட்டார்கள்
12 அப்போது பினேகாசு எழுந்திருந்து
அதற்காக ஞாயத்தைச் செய்துநின்றான்
குப்பெனவே அதுமுகாந் தரத்தையிட்டு
கோபமாஞ் சங்காரம் நின்றுபோச்சு
எப்போதுந் தலைமுறையின் வழிவழியாய்
இவனுக்கது நீதியாய்ப் பலிக்கலாச்சு
எப்போதுந் தலைமுறை தத்துவங்களாக
இவனுக்கது நீதியாய்ப் பலிக்கலாச்சு
13 மெரிபாவின் தண்ணீர்க ளருகிலேயும்
வெகுகோப மவருக்குண் டாக்கினார்கள்
கருமோசேக் கவர்களுடை நிமித்தமாகக்
கடும்பொல்லாப் பங்குவந்து நேரலாச்சு
பெரும்பாரந் தாங்கிவந்த அவன்மனசில்ப்
பெலயீனக் குணத்தினாலக் கோபங்கொண்டு
பெருவிசேடச் சமுகத்தில் வாய்பதறிப்
பேசிசொல்லால்ப் பொல்லாங்கை வருத்திக் கொண்டான்
14 தங்களுக்குச் சுவாமிசொன்ன படிக்கவர்கள்
சனசதள மறுத்தழித்துத் துரத்திடாமல்
பங்கமா யவர்களுடன் கலந்துகொண்டு
பாவமாய் அவர்கள் செயல் தனைப்படித்து
அங்கவர்கள் விக்கிரகச் செயல்களுக்கும்
அஞ்சியே வணக்கங்கள் செய்திட்டார்கள்
தங்களுக்கிப் படியவர்கள் வலைசுருக்குஞ்
சருவமோச மாகவுமே நடந்திட்டார்கள்
15 தங்களாண் குழந்தை பெண் குழந்தைக்கும்பை
தகனப்பெலி யிட்டார்கள் பேய்களுக்கு
பங்கக்கானான் விக்கிரகப் பொம்மைகட்குப்
பாவமில்லா அந்தரத்தஞ் சிந்தினார்கள்
அங்கவர்கள் சிந்துமந்த ரத்தத்தாலே
அவர்க்ளுடைதேசந் தீட்டாகிப்போச்சு
தங்கள்செய லழுக்குக்கே யுள்ளுமாகித்
தம்செயலால்ச் சோரம்போ யகன்றிட்டார்கள்
16 சாமிகோபம் அதினாலே அவர் சனமாஞ்
சபைமேலே மூண்டதினா லவர் தமது
பூமியாஞ் சுதந்திரத்தை யருவருத்துப்
புறச்சாதி கையிலொப்புக் கொடுத்துவிட்டார்
தீமையா யவர் களையும் பகைவராண்டு
சிறுமையா யப்போது ஒடுக்கினார்கள்
ஆமவர்கள் கையின்கீ ழிவர்க்ள தாழ்ந்து
அடிமைபோல் நின்றிடவும் நேர்ந்துபோச்சே
17 அவர்களையோ அனேகம்விசை மீட்டுவிட்டார்
அவர்களோ தங்களுடை யோசனையால்
அவருக்கே எதிராகக் கலகம்பண்ணி
அக்ரமத்தால் சிறுமைக்குள் ளாகினார்கள்
அவர்கள் கூப்பாடவர் கேட்கும் போதுஅங்கே
அவர்கள்படும் இடுக்கத்தை நோக்கிப்பார்த்து
அவர்களுடை நிமித்தமாய்த் தம்முடைய
ஆதியுடம் படிக்கைதனை நினைவுகூர்ந்தார்
18 அவர்கள்மேல் வந்திருந்த சிறுமைதீமை
அனைத்தையுமே மிகுந்ததயைப்படிகண்ணோக்கி
அவர்களுக்காய் தமக்குள்ளே கரிசனமாய்
அன்புடனே மனஸ்தாபப் பட்டுக்கொண்டு
அவர்களையங் கடிமைசிறை யாக்கிக்கொண்ட
அனைவருக்கும் முன்பாக அவர்களுக்கு
அவதியிலே யிரக்கங்கள் கிடைக்கச் செய்தார்
அவதியிலே யிரக்கங்கள் கிடைக்கச் செய்தார்
19 எங்களுடை நல்ல தெய்வ மானசுவாமீ
யாங்களும் ததனநாமம் போற்றல்செய்து
பங்கமற உமது துதிக் காகமேன்மை
பாராட்டி நின்றிடவே எமைரட்சித்து
20 எங்களை நீர் சாதிகளி லிருந்து சேரும்
இசரவேல்ச் சாமி தெய்வ மாமுமக்கே
சங்கைசெல்லும் ஆம்! அனாதி யாகஎன்றும்
சனமெல்லாம் ஆமன் அல்லே லூயாசொல்ல!
106 சங்கீதம் வேறு ராகம்
மோகனம் ஏகதாளம்
நல்லோர் எகோவாதாமே
1 அல்லேலுயா நீங்கள் அவரையே துதியுங்கள்
அவருடை கிருபையோ என்றென்றுமுள்ளதே – நல்
2 எகோவாவின் வல்லமை இயம்பியே யவருடை
வெகுவான துதியெல்லாம் விளம்பிடும்மனிதனார் – நல்
3 ஞாயத்தை யெவ்விதக் காலத்துங் கைக்கொண்டு
தேயத்தில் நீதியைச் செய்பவன் பாக்யவான் – நல்
4 உம்முடை சனத்துக்காம் உள்ளன்புப்படி நினைந்
தும்ரட்சிப்பெனக்கிங்கேயு தவியாய்வரச் செய்யும் – நல்
5 உம்மாலே தெரிவுபட்டுலகத்தி லிருப்போரின்
நன்மையை யப்போது நான்கண்டு மகிழுவேன் – நல்
6 உம்முடை சுதந்தரத் துடன்மேன்மை பாராட்டி
உம்சன மகிழ்ச்சிக்கு உடந்தையாய் மகிழுவேன் – நல்
7 முக்கிய மாய்ப்பாவம் முன்னோர்களுடன் செய்தோம்
அக்ரமம்பண்ணினோம் ஆகாமியம் நடப்பித்தோம் – நல்
8 எம்முடை பிதாக்களோ எகிப்பத்துத் தேசத்தில்
உம்முடைஅதிசயம் உணராதே போனார்கள் – நல்
9 உமது நற்றயைத் திரள் உணராமல நீள் நாணல்ச்
சமுத்திரத்தோரத்தில்ச் சல்லியஞ் செய்தார்கள் – நல்
10 எகோவாதம் வலு தெரிய இவர்களைத் தம்முடை
மகிமைப்பேர் நிமித்தியம் மன்னித்துரட்சித்தார் – நல்
11 கட்டாந்தரை யாய்நாணற் கடலமாற உதம்பினார்
வெட்டையா யாழத்தில் மிதித்தேறச் செய்திட்டார் – நல்
12 அவர்களை பகைஞன் கைக் ககற்றியே ரட்சித்தார்
குவிமாற்றார் கையிலே கொடுக்காமல் மீட்டிட்டார் – நல்
13 சத்துருத் திரளந்தத் தண்ணீர்க்குள் முங்கவே
தத்தியங் கொருவனுந் தப்பின தில்லையே – நல்
14 எகோவாவின் சொல்லுண்மை இவர்கட்குத் தெரிந்தப்போ
மகிழ்ந்தவர் துதியைத்தம் வாயினால்ப்பாடினர் – நல்
15 கற்தரின் வருதிக்குக் காத்திரா தங்கவர்
உத்தமச்செயல்களை உணராமல் மறந்தார்கள் – நல்
16 வெகுஇச்சை வனாந்தர மீதிற்கொண் டங்கவர்கள்
பகிடி போல் எகோவாவைப் பரிட்சைபார்த் துழன்றனர் – நல்
17 அவர்கள் கேட்டதுகளை ஆகிடச் செய்துவைத்
தவர்களினான் மாவி லசதிவரச் செய்திட்டார் – நல்
18 எகோவா நல் விசேடத்தோ னெனுமாறோன்மோசே
பகையெரிப் பானார்கள் பாளயப் பாங்கிலே(மேல்ப் – நல்
19 பூமிவாய் திறந்தந்தப் பொய்த்தாத்தான் அபிராமின்
வீண்மனுக் கூட்டத்தை விழுங்கியே மூடிற்று – நல்
20 அக்னியா லவர்கள் கும் பழிந்திட ஆகாதோர்
அக்னியின் சுவாலையா லழிசாம்ப லானார்கள் – நல்
21 ஒரேப்பில்ப் பசுவின்கன் றொன்றையுண்டாக்கியே
வார்ப்பான விக்ரமம் வணங்கியே நின்றார்கள் – நல்
22 புல்த்தின்குங் கன்றைப்போல்ப் புவியில்த் தம்மகிமையை
மெல்லினமாய்மாற்றிமீறுதல் செய்தார்கள் – நல்
23 இப்படித்தங்களின் இரட்சிப்புத் தெய்வமாந்
தற்பரன் தன்னையே சாலவும் மறந்தார்கள் – நல்
24 காம்நாடாம் எகிப்பத்திற் கனச்செய்லதிசயம்
ஆம்! நாணற்கடலண்டை அருட்சியுஞ்செய்தாரே – நல்
25 அவர்தெரிந்த மோசேயோ அவருடை உக்கிரத்தை
யவர்களுக் கழிவாக தகற்றியே நின்றிட்டான் – நல்
26 இப்படியவனவர்கள இடிதல்முன் நில்லாட்டால்
அப்போதேயவர்களை யழிப்பேனென்றறைந்திட்டார் – நல்
27 அவர் வார்த்தை நம்பாமல் ஆசிப்பின் தேசத்தை
யவத்தமாயெண்ணியேயாலட்சியஞ் செய்தார்கள் – நல்
28 எகோவாவின் சத்தத்தை யின்பமாய்க் கேளாமல்
அகமாய்தங்கூடாரத் தடங்கிவீ றிட்டார்கள் – நல்
29 ஆகையால்க் காட்டினில் அவர்களை மடிவிக்க
ஏகோவா அவர்களுக்கெதிராய்க்கையெடுத்திட்டார் – நல்
30 சீர்மைகள்தோறுமே சிதறவுமவர்கள் வித்
தோரொருசாதிக்குள் ளோழியவும் வகைசெய்தார் – நல்
31 பெயொர்பாகால்க் கவர்களே பிணைந்தைக்யமாகியவ்
வுயிரற்றபொம்மைப் பெலியுணவையும் பொசித்தார்கள் – நல்
32 தங்கள் செயலாலவர் தாங்கலைமூட்டிடச்
சங்காரமவர் கட்குட் சாப்பாயுட்புகுந்தே – நல்
33 பினே காசப்போதெழுந்து பேணியேநடுச்செய்தான்
சனச்சிதைவதினாலே சமூலமாய் நின்றது – நல்
34 அவனுக்கதுதலைமுறைக ளாகவே யென்றைக்குந்
தவறாத நீதியாய்த் தாபகமாயிற்றே – நல்
35 மெரிபாவின் தண்ணீரில் வெகுகோபமவருக்கு
வருவித்தனர் மோசேக்கும் வந்தததில்ப்பொல்லாங்கு – நல்
36 அவனாவிக்கெரிச்சலை யவர்கள் வரச்செய்ததால்
அவன்பதறியுதட்டாலே யடாதைப்பேசினான் – நல்
37 எகோவாவின் சொற்படிக்கிவர்கள் திரட்சனங்களைப்
பகைத்தழிக்காமலே பலபேருட்கலந்தார்கள் – நல்
38 சாதிகளின் துற்செயலைத் தாங்களுங்கற்றவர்கள்
கோதானவிக்கிரகங் கும்பிட்டுக்கெட்டார்கள் – நல்
39 இப்படிக் கண்ணியாய் இவர்கட்குப்புறச்சாதித்
தப்பிமனிதர்கள் சாலவுமானார்கள் – நல்
40 தங்களின் புத்திரரைத் தங்கள் பெண்மக்களையும்
பங்கமாப் பேய்கட்கும் பலியாகக் கொன்றார்கள் – நல்
41 தங்களான் பெண்மக்கள் தகனமாய்க்கானானின்
பங்கமாம்விக்ரகப் பலியாகச் செய்தார்காள் – நல்
42 குற்றமில்லாச் சிசுக்களின் ரத்தத்தைச் சிந்தின
குற்றத்தால்த் தேசந்தீட் டுற்றதுமாயிற்று – நல்
43 தங்களின் நடத்தையால்ச் சாலவுமழுக்காகித்
தங்களின் செயல்களால்ச் சார்ந்தார்கள்சோரமாய் – நல்
44 அதினாலேஎகோவாதம் மாக்கிரமந்தன்னைத்தஞ்
சுதந்தரச்சனத்தின்மேல்த்தொடுத்ததைவெறுத்திட்டார் – நல்
45 புறச்சாதிக்கைவசத்தில்ப் புழுக்கைகளானபோது
பகைச்சவர்களவர்கள்மேற்பங்கமாயண்டார்கள் – நல்
46 அவர்களின் சத்ருக்கள் அவர்களை யொடுக்கினர்
அவர்களின் கைக்குக்கீழ் அதினாலே தாழ்ந்தார்கள் – நல்
47 அநேகமாந் தடவையாய் அவர்களை விடுவித்தார்
அநேகமாந் தடவையாய் அவர்களை விடுவித்தார் – நல்
48 அவர்களோ தங்களின் ஆங்காரயோசனையால்
அவருக்கேயெதிராக அமளிகள் செய்தார்கள் – நல்
49 அவர்களோ தங்களுடை அக்ரம நடத்தையால்
அவமாகச்சிறுமைக்குள் அமிழ்ந்தவேவீழ்ந்தார்கள் – நல்
50 அவர்களினபையச்சொல் அவர்கேட்கும்வேளையில்
அவர்கட்குவந்த அந்த ஆபத்தை நீக்கிவிட்டார் – நல்
51 தம்முடைஉடம்படிக்கை தனையவர் கட்காய் நினைத்தார்
தங்கிருபைத்திரட்படியே சாமிபரதாபங்கொண்டார் – நல்
52 அவர்களைச் சிறைபிடித்த அனைவர்க்கும்முன்பாக
அவர்கள் நல்லிரக்கத்தை யடைந்திடச்செய்தாரே – நல்
53 எங்கள் தெய்வமாகிய எகோவா நீர் ரட்சித்து
எங்களைப் புறச்சாதி யிடத்தினின்றுகூட்டி வாரும் – நல்
54 உமது நல்விசேடப்பேர்க்கொவ்வவேஉமைப்போற்றி
உமதுதுதிக்காகமேன்மை யுவந்தப்போபாராட்டுவோம் – நல்
55 இசராவேல்தெய்வமாம் எகோவாவுக்கனாதியாய்
இசையட்டுந்தோத்ரங்கள் என்றும் ஆமன்! அல்லேலூயா – நல்