103 சங்கீதம்
103 சங்கீதம்
தாவீதின் சங்கீதம்
1 – வது பங்கு வச.1-13
காம்போதி ரூபகதாளம்
மனமேமுழு உள்ளமே இப்போவாழ்த்துனது எகொவாவை
மனமேமுழு உள்ளமே
1 தனிவிசேடமாம் அவரின் நாமத்தைத்
தாகத்துடனே தெரிவித்தேற்றியே – மனமே
2 கற்தரைத்தோத்திரஞ் செய்து நின்றிடு
காதலாக என் னாத்துமாவே நீ
கற்தர்செய்த நன்மைகள் யாவையுங்
கருத்தில்மறந்திடாய் – மனமே
3 உனதக்கிரமம் யாவையும் நீக்கி
உனதுநோய்பிணி யாவையும் போக்கி
உனது பிராணன் அழிவினின்றே
உயரச் செய்து வைத்தார் – மனமே
4 கிருபையிரக்கத்தால் உனக்கு மேன்மைக்
கீரிடஞ்சூட்டி மகிமைதந்தனர்
திருப்தியாக்கினர் உனதுவாயை
தெய்வம் நன்மையினால் – மனமே
5 கழுகுக்கொப்பாக உன துநாட்களைக்
காண்பாய் திரும்ப வாலைவயதாய்
நெழிந்தேயொடுங்கும் யாவர்க்குந்தெய்வமே
நீதிஞாயஞ் செய்வார் – மனமே
6 இசைவாய் மோசே யதிபன் தனக்கு
எகோவாதமது வழியைக்காட்டினார்
இசரவேல்மக்க ளறியச் செய்தனர்
எகோவாதம் செயலை – மனமே
7 கற்தரிக்கம் மிகுந்தகிருபை
கனிவுநீண்ட சாந்தமுள்ளவர்
நித்தியகாலமாய் வழக்குச்செய்திடார்
கோபத்தை நீட்டமாட்டார் – மனமே
8 நமதுபாவ வினைக்குத் தக்கதாய்
நமக்குப்பதிலைச் செய்யமாட்டாரே
நமதக்கிரமம் இருக்குந் தன்மைபோல்
நமக்குச் சரிக்கட்டார் – மனமே
9 பூமியின்மேலே வானமிருக்கும்
பூரணஉயரம்போல் வல்லபமாகுமே
சாமிகிருபை தமக்குப்பயந்த
சனங்கள் யாவர்மேலும் – மனமே
10 விகற்பமாங்கிழக்கு மேற்குத்தூரம்போல்
மீறுதல்நம்மை விட்டகலச்செய்கிறார்
தகப்பன்போலிரங்குவார் தமக்குப் பயந்த
சனங்கள் யாவருக்கும் – மனமே
2 – வது பங்கு வச.14-16
வராளி ஆதிதாளம்
நாமின்ன உருவென்று
நாமியோநம்மையு மறிவார் ஆமாம்
பூமியின்மண்ணென்று
பூர்த்தியாய்நம்மையும் நினைப்பார்
1 மனிதன்தன்நாட்களில்
வாடியபுல்லுக்குச் சரியே அவன்
தனிவெளிப்புட்பம்போல்த்
தழைத்துப் பூத்திருப்பானே – நாமி
2 காற்றதின் மேல் வீசிக்
கடந்தவுடனே ஒழியும் அது
பூத்திட்ட தலமதைப்
பொருந்தாது அப்புறந்தானே – நாமி
3 – வது பங்கு வச.17-22
காம்போதி ஆதிதாளம்
எகோவாவின்கிருபை நீதி நிலை நிற்கும்
என்றைக்கும் அனாதி காலமாய்
1 ஏகோவாவுக் கஞ்சுவோர்மேல்
ஏகொவாவின் கிருபைநிற்கும்
இவர்கள்வித்தார் மேலேயவர்நீதிநிற்குமே – எகோ
2 எகொவாவின் உடம்படிக்கை தன்னைக் காத்து
எகொவாவின் கட்டளைகள்மேல்
மிகவுமே பிரியங்கொண்டு மேவியதுபோலேசெய்ய
வகையாக நினைத்திருக்கும் மாந்தர்பேரிலும் – எகோ
3 கற்தர்பர மண்டலங்களில்த் தமது
பத்ராசன வீட்டை யுறுதியாய்
வைத்திருக்கிறாரே அவர் மகிமையின் ராசரிக்கம்
எத்தலத்து வசிப்புமான யாவும் ஆளுமே – எகோ
4 கற்தருடைய சொற்படியே கேட்டு அவர்
கற்பனைச்சொல்ப் படியே செய்கின்ற
மெத்தப்பெல னுள்ளமாக வீரரான சேனைகளே
கற்தருக்குத் தோத்திரத்தைக் கதிக்கச்செய்யுங்கள் – எகோ
5 எகொவாவின் விருப்பம்போலே செய்யும் அவர்
இஷ்டவேலை யாட்களாகிய
சகலமாம் ஏகொவாவின் தளங்களாஞ் சேனைகளே
சாமியவர்க் கனந்ததுதி சார்த்திடுங்களே – எகோ
6 கற்தராளு மெவ்விடத்து முள்ள அவர்
கைச்செயல்களான சிருட்டியே
மெத்தத்துதித் தவரைநீங்கள் மேன்மையாக வாழ்த்திடுங்கள்
பத்தியாயென் ஆவிநீயும்பரனுக்குத் தோத்திரஞ்செய் – எகோ