55 சங்கீதம்
55 சங்கீதம்
வெண்பா
கிண்ணார வாத்தியங்கள் கெட்டியாய்க்கொட்டுகின்ற
இன்னிசையிற் பாடஇராகத் தலைவனுக்கு
மன்னனாந் தாவீது வாஞ்சையாய் ஒப்புவித்த
விண்போதச் சங்கீதமே
1 – வது பங்கு வச.1 – 11
கலியாணி திரிபுடைதாளம்
தெய்வமேநீர் என்விண்ணப்பத்துக்கு
மறைந்திராமல் செபங் கேளும் கேளும்
1 அய்யா ! எனைக்கவனித்
தருளும்மறுவுத்தாரம் இதோ
ஆகாதோன் செய்யும் இடுக்கமும் எதிரி
அமளிசெய் கூக்குரல்களும் எழும்பி
ஏகமாய் அடரஎந்தன் செபத்தில்ப் புலம்பி
ஏங்கினேனே – தெய்
2 என்மேலே அக்ரமச்சாட்
டேற்றியே குரோதத்தினால் இப்போ
என்னைப் பகை செய்கிறார்களே எனக்குள்
என்நெஞ்சம் நோவடையுதே மரணத்
துன்பத்தின் திகில்கள் எந்தன்மேலே விழுந்
தாட்டும் ஆட்டும் – தெய்
3 நடுக்கமும் பயமும்வந்து
அருக்களிப்பு மெனைமூடிற்று ஆகா
எனக்கிங்கே புறாவின்செட்டையிருந்தால் நலமே
கடக்கப்பறந் தெவ்விடத்தும் போவேன் பின்னுங்
கானகத்தில்த் தங்கித்தரித் திருப்பேன் தரித்
திருப்பேன் இருப்பேன் – தெய்
4 பெருங்காற்றுப் புசலுக்கு
ஒதுங்கிடத் தீவரிப்பேன் எடுத்து
விழுங்கிடு மவர்களை யாண்டவரே ஊரில்
கொடுமைச் செயல்ச்சண்டைகாண்கிறேனேவேறாய்ப்
பிரிந்திடச் செய்யும் அவர்கள்நாவை அவர்கள்
நாவைத் தானே – தெய்
5 அதுகளிராப் பகலாய்
அதின்மதில்மேலே சுற்றும் அய்யோ
அதினடுவில் வாதிப்புத் துன்மார்க்கம் இருக்கும்
அதினடுவில்க் கேடுபாடுமுண்டு என்றும்
அதின்வீதியைக் கபடமும்தந்திரமும் விட்டு
நீங்கிடாதே – தெய்
2 – வது பங்கு வச.12 – 19
ஆனந்த பைரவி ஆதிதாளம்
என்னைநிந்தை செய்பவன்முன்னே எதிரியல்ல
எதிரியானாலதைச் சகிப்பேன்
1 என்னையிப்போ விரோதிப்போனும்
என்னைமுன்னே பகைத்தோனல்ல
அன்னபடியானால் நானோ
அவனுக்கு மறைந்திருப்பேன் – என்னை
2 நீயெனக்கு ராசியானவன் அறிமுகத்தோன்
நீயென்வழி காட்டிதானல்லோ
நீயும்நானும் ஒருமுகமாய்
நேசஇன்ப ரகசியமாய்
நாயன்வீட்டுக் கோர்மையோடே
நடந்தேறிப் போனமல்லோ – என்னை
3 சாவவர்கள்மேலே ஒர்தண்டல்க் காரன்போல
சாய்ந்துதிடீரென்று விழட்டும்
சீவனுடன் பாதளத்துள்ச்
சேரட்டுமே அவர்கள் வசிப்புஞ்
சிந்தையுமே பொல்லாதாகச்
சீரழிந்து நிற்கிறதே – என்னை
4 என்தெய்வத்தை நானோநோக்கியே கூப்பிடுவேன்
என்னை ரட்சிப்பாரே எகொவா
அந்திசந்தி மத்தியானம்
ஆகக்கெஞ்சிக் கூவுவேன்நான்
என்சத்தத்தை ஏகொவாதாம்
இன்பமாகக்கேட்டிடுவார் – என்னை
5 என்மேல்வந்த போரைநீக்கியென் ஆத்துமாவை
இரட்சிப்பாரே சமாதானமாய்
என்னுடனே திரள்த்திரளாய்
எதிர்த்தாலுந் தெய்வங்கேட்டு
இவர்களைத் தாழ்த்திடுவார்
இவர்களைத் தாழ்த்திடுவார் – என்னை
3 – வது பங்கு வச.19 – 23
சங்கராபரணம் ஏகதாளம்
ஆதிமுதல்ஞாயத்துக்குத் தெய்வம்உட்கார்ந்தார்இதோ !
ஆதி முதல்ஞாயத்துக்குத் தெய்வம் உட்கார்ந்தார்
1 ஏதவர்களிடத்தில்க்குணமாறுதலில்லை
எகோவாவாந் தெய்வத்துக்கும்
அஞ்சமாட்டார்கள் – ஆதி
2 தன்னுடனேசமாதானமாய்த் தரித்திருந்தோர்மேல்
தன்கையைப் போட்டு டம்படிக்கை
தனைக்கொலைத்துவிட்டான் – ஆதி
3 வெண்ணையைப்போல் அவன்வாயோ
மிருதுவாயிருக்கும்
என்ன அவன் இருதயத்தில் இருக்கும்உயித்தமே – ஆதி
4 அவன்சொல்லுகள் எண்ணையிலும் அதிகமெதுவே
பவிஞ்சில் அதுஉருவிவீசும்
பட்டையங்களுந்தான் – ஆதி
5 எகொவா மேலுன்பாரம்போடு ஏந்திக்காத்திடுவார்
தகுந்தநீதிமானையென்றுந்
தள்ளாடவொட்டார் – ஆதி
6 இரத்தப்பிரியர் சூதுள்ளோராம் இவர்கள் தங்களின்
சிற்றாயுள்முடிவுக்கும்வந்து
சேரமாட்டார்கள் – ஆதி
7 அவர்களைநீர் அழிவின்குழி அமிழ்ந்தச் செய்குவீர்
தவனமாய் நான் உம்மைநம்பிச்
சார்வேன் தெய்வமே – ஆதி